Monday, May 3, 2010

காலில் விழுந்த கம்யுனிசம்

போனவாரம் திங்கள் கிழமை 26-04-10 அன்று சொந்த ஊருக்கு செல்வதற்காக பேரூந்தில் ஏறி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனர் இருக்கையில் அலட்சியமாக இருந்த ஒரு மொட்டை ஏறுவோரை ஏளனமாக பார்ப்பது போல பார்த்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார். பேரூந்தில் பல சில்லறை விற்பனையாளர்கள் கூவி கூவி அவரவர் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். பேரூந்திலும் ஓரளவு கூட்டம் சேர்ந்து விட்டது. இன்னமும் வண்டியை கிளப்ப மாட்டேங்கிறானே என்ற எரிச்சல் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஒருவர் கையில் சில பத்திரிகைகளுடன் ஏறி உரக்க சப்தத்துடன் தனது பத்திரிகையை உயர்த்தியபடி சொல்லிக் கொண்டே வந்தார்.
அமெரிக்காவுக்கு அடிவருடும் மத்திய அரசாங்கம், அணு உலை வெடித்தால் அமெரிக்காவுக்கும் அணு அளவும் இழப்பு கிடையாது, நம் பாதுகாப்பை உதாசீனம் படுத்தும் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு இது போன்ற செய்திகள் உள்ள பத்திரிகை. வாங்கி விழிப்படையுங்கள் என்று கூவிக் கொண்டிருந்தார். எல்லாரும் வாங்குங்க வாங்குங்க என்று மேல் மூச்சு வாங்க அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். எல்லாரும் அவர் சொல்வதைத்தான் கேட்டார்களே ஒழிய பத்திரிகையை கேட்கவில்லை.

நான் எனது இருக்கையில் இருந்து எழுந்து என்ன வென்று பார்த்து, அது புதிய ஜனநாயகம் (உண்மை கம்யுனிஸ்ட்களின் பத்திரிகையாம்) என்று அறிந்து சரி நாமாவது வாங்குவோம். என்னதான் சொல்லியிருக்கிறான்னு பார்க்கலாமேன்னு ஒரு புத்தகம் தாங்கண்ணேன்னு கேட்டேன். நான் கேட்கவும் ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். நானும் உடனே எனது மேள்சட்டைப் பையை துளாவி ஒரு 50 ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். அவர் சில்லறை இல்லையான்னு கேட்க நான் உதட்டைப் பிதுக்கினேன். அவர் சில்லறையை எடுக்க தன் பையில் கையை வைக்கும் போதே ஓட்டுநர் கியரைப் போட்டு வண்டியை கிளப்ப ஆரம்பித்தார். இவரும் பரபரப்பாக சில்லறையை எடுத்து என்னிடம் தந்து விட்டு வாசலை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ஓட்டுநர் வண்டியை கிளப்பி விட்டார்.

இவர் ஓட்டுநரை அண்ணே கொஞ்சம் மெதுவா போங்க நான் இறங்கிக்கிறேன்னு சொன்னார், ஆனால் அவரோ முறைத்து பார்த்து விட்டு நீ அடுத்த ஊரில இறங்கி வா அப்ப்டின்னு வண்டியை வேகப்படுத்தினார். ஓட்டுநரிடன் என்னவெல்லாமொ சொல்லிப் பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கடைசியாக அந்த பத்திரிகை விற்பனை செய்தவர் திடீரென ஓட்டுநரின் கால் பக்கம் போனார். என்ன் செய்கிறார், காலை வாரி விடப் போகிறாரா? என்று நினைத்து எட்டிப் பார்த்தேன். பார்த்தால் இவர் அவருடைய காலைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தார். அப்படியும் அந்த ஓட்டுநர் மனம் இறக்கமே இல்லாது வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார். இவரும் காலை விட்ட பாடில்லை.
இதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ரொம்ப வருத்தமாகி, நாம் பத்திரிகையை வாங்கினதினால் தானே இவருக்குப் பிரச்சனை, வாங்காவிடில் அவர் பாட்டுக்கு இறங்கிப் போயிருப்பாரே என்று நினத்து எழுந்து ஓட்டுநரைப் பார்த்து இரக்கமே கிடையாதான்னு குரல் எழுப்பினேன்? இதற்கு அது வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சக பயணிகளும் ஓட்டுநரை திட்டி யோவ் உடனே வண்டியை நிறுத்துயா? என்னு ஓங்கி குரல் எழுப்பினர். பயணிக்ள் சத்தம் கேட்டவுடனே வண்டி உடனே நிறுத்தப் பட்டது. அவரும் இறங்கிக் கொண்டார். காலில் விழுந்த கம்யுனிசவாதியின் சொல்லுக்கு செவிகொடுக்காத ஓட்டுநரை வண்டியை நிறுத்த வைத்தது எது? பயணிகளின் அதிகாரச் சொல்தானே? என்னதான் கொள்கை பேசினாலும் தனிப் பட்ட சொந்தப் பிரச்சனையாக வரும் போது எவரும் கொள்கைகளை மறந்து எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர் என்பதை அன்று கண்டேன்.