Monday, March 28, 2016

அடடே ஆரம்பம் கேநகூ* ஆன கதை

ஒவ்வொருமுறை தேர்தல் திருவிழா வரும்போதும் ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சி மாறுவதில்லை என்பது தெரிந்திருந்தாலும் வேறு வழியின்றி மாற்றம் ஏமாற்றம் எப்படியோ போகட்டும் என மனதிற்குப் பட்டவர்களுக்கு ஓட்டு குத்தி ஒரு அற்ப சந்தோசம் அடையும் வாக்காளர் மனது. சாக்கடை அரசியலில் அரிதிலும் அரிதாகவே அத்தி பூத்தாற்போல் உண்மையான தலைவர்கள் எழும்புகின்றனர். தமிழக அரசியலில் மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட தலைவர்கள் எழும்பி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

காமராஜர் ஆட்சிக்குப் பின் வந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் நலனை விட தம் மக்கள் நலனை அதிகமாக விரும்பி அவர்களை உலகமகா கோடீஸ்வரர்கள் ஆக்கினதுதான் திராவிட கட்சிகளின் சாதனை. தமிழக அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டவர் வைகோ அவர்கள். ஆனால் அவரோ அத்தனை நடுநிலையாளர்களின் நம்பிக்கையையும் தன் மானத்தையும் தொடர்ந்து காற்றில் பறக்கவிட்டு இன்று அவரின் நிலை அவருக்கே தெரியுமா என்ற சந்தேகம் வருமளவுக்கு பிதற்றிக் கொண்டிருக்கிறார். 300 ரூபாய் சம்பளம் வாங்கி 3000 ரூபாய்க்கு நடிப்பவர் என்று பெயர்பெற்ற சிவாஜிகணேசன் இல்லாத குறையை இன்று வைகோ கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார், 

அரசியல் உலகில். அடுத்து நடைபெற இருக்கிற தமிழக தேர்தலில் மக்களுக்காக செயல்படவேண்டும் என்ற நல்ல நோக்கில் மநகூ கடந்த சில மாதங்களாக நல்ல நம்பிக்கையை விதைத்திருந்தது. இப்பொழுது கூட்டணி பெயரையே கேநகூ என மாற்ற வேண்டிய அளவுக்கு, மரியாதையே தெரியாத ஒரு “தூ” நபருடன் முற்றிலும் நிதானமின்றி நடமாடுகிறார் வைகோ அவர்கள். நல்லக்கண்ணு போன்ற எத்தனையோ நல்ல தலைவர்கள் எல்லாம் இருக்க, சொந்த சாதிக்காரர் என்ற ஒரே பாசத்தினால் அடிப்பொடி தொண்டனை விட இவர் அவருக்குக் காவடி தூக்குவது காணச் சகிக்கலை. தேர்தலுக்கு முன் தன் வேலையைச் செய்ய வைகோ அவர்கள் எவ்வளவு வாங்கினார் என்பது நமக்குத் தேவை இல்லை என்றாலும், தேர்தலுக்குப் பின் மதிமுக என்ற கட்சி கண்டிப்பாக இல்லாமல் போக வாய்ப்பு அதிகம், ஏனெனில் கட்சி பெயரில் இருக்கும் மதி முன் களப் பணி ஆற்றும் தலைவரிடம் சுத்தமாக இல்லை. வைகோவின் ஆளுமை இப்படி கொஞ்சம் கூட மரியாதை மற்றுன் இங்கிதம் இல்லாத சினிமா நடிகர் முன்பு மண்டியிடுவதற்குப் பதிலாக அவர் பேசாமல் அரசியல் வனவாசம் போவது உத்தமம்.

அஸ்கு: என்னண்ணே ரொம்ப கடுப்புல எழுதின மாதிரி இருக்கு

பிஸ்கு: பின்ன என்ன தம்பி, ஒவ்வொரு முறையும் மாற்றம் வராதா என்று நம்பிக்கைக் கீற்று வரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அஸ்கு: இதற்கு வைகோ என்னண்ணே பண்ணுவார்... பாவம்.

பிஸ்கு: யப்பா, ஒரு உண்மையை நீ தெரிஞ்சுக்கணும். இன்றைய அரசியல்வாதிகளில் நல்ல அரசியல் அறிவு மற்றும் மக்கள் மீது கரிசனம் உள்ளவர்களில் வைகோ முக்கியமானவர். ஆனால் ஒவ்வொருமுறையும் முடிவெடுப்பதில் சொதப்பி இன்னோவா சம்பத்துகளைத்தான் உருவாக்குகிறார். தெளிவான திட்டமிடுதலும் பொறுமையும் இல்லை.

அஸ்கு: அண்ணே அவரும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கூட்டணிகளில் இருந்து பார்த்தார் எதுவும் சரிப்படலை என்னப் பண்ணுவார்.

பிஸ்கு: கூட்டணியைத் தேடிப் போகிற இடத்தில் ஏன் இவர் இருக்கிறார், எதுவுமே இல்லாத உளறல் கேப்டனைத் தேடி ஏன் எல்லாரும் போறாங்க, சிந்தித்துப் பார்க்கணும்.

அஸ்கு: அவர் என்னண்ணே பண்ணுவார்...

பிஸ்கு: அவர் அழாம இருந்தா போதும்.... சரி சரி கண்ணை துடைச்சுக்கோ

மநகூ = மக்கள் நல கூட்டணி, கேநகூ = கேப்டன் நலக் கூட்டணி


1 comment:

Anonymous said...

Slots – Online Casino - Ambien Hoppie
Play the most 온라인 카지노 슬롯 exciting online slots at the biggest online casino in the UK with the loosest welcome bonuses and offers.

Post a Comment