Monday, March 28, 2016

அடடே ஆரம்பம் கேநகூ ஆன கதை

ஒவ்வொருமுறை தேர்தல் திருவிழா வரும்போதும் ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சி மாறுவதில்லை என்பது தெரிந்திருந்தாலும் வேறு வழியின்றி மாற்றம் ஏமாற்றம் எப்படியோ போகட்டும் என மனதிற்குப் பட்டவர்களுக்கு ஓட்டு குத்தி ஒரு அற்ப சந்தோசம் அடையும் வாக்காளர் மனது. சாக்கடை அரசியலில் அரிதிலும் அரிதாகவே அத்தி பூத்தாற்போல் உண்மையான தலைவர்கள் எழும்புகின்றனர். தமிழக அரசியலில் மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட தலைவர்கள் எழும்பி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. காமராஜர் ஆட்சிக்குப் பின் வந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் நலனை விட தம் மக்கள் நலனை அதிகமாக விரும்பி அவர்களை உலகமகா கோடீஸ்வரர்கள் ஆக்கினதுதான் திராவிட கட்சிகளின் சாதனை. தமிழக அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டவர் வைகோ அவர்கள். ஆனால் அவரோ அத்தனை நடுநிலையாளர்களின் நம்பிக்கையையும் தன் மானத்தையும் தொடர்ந்து காற்றில் பறக்கவிட்டு இன்று அவரின் நிலை அவருக்கே தெரியுமா என்ற சந்தேகம் வருமளவுக்கு பிதற்றிக் கொண்டிருக்கிறார். 300 ரூபாய் சம்பளம் வாங்கி 3000 ரூபாய்க்கு நடிப்பவர் என்று பெயர்பெற்ற சிவாஜிகணேசன் இல்லாத குறையை இன்று வைகோ கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார், அரசியல் உலகில். அடுத்து நடைபெற இருக்கிற தமிழக தேர்தலில் மக்களுக்காக செயல்படவேண்டும் என்ற நல்ல நோக்கில் மநகூ கடந்த சில மாதங்களாக நல்ல நம்பிக்கையை விதைத்திருந்தது. இப்பொழுது கூட்டணி பெயரையே கேநகூ என மாற்ற வேண்டிய அளவுக்கு, மரியாதையே தெரியாத ஒரு “தூ” நபருடன் முற்றிலும் நிதானமின்றி நடமாடுகிறார் வைகோ அவர்கள். நல்லக்க்ண்ணு போன்ற எத்தனையோ நல்ல தலைவர்கள் எல்லாம் இருக்க, சொந்த சாதிக்காரர் என்ற ஒரே பாசத்தினால் அடிப்பொடி தொண்டனை விட இவர் அவருக்குக் காவடி தூக்குவது காணச் சகிக்கலை. தேர்தலுக்கு முன் தன் வேலையைச் செய்ய வைகோ அவர்கள் எவ்வளவு வாங்கினார் என்பது நமக்குத் தேவை இல்லை என்றாலும், தேர்தலுக்குப் பின் மதிமுக என்ற கட்சி கண்டிப்பாக இல்லாமல் போக வாய்ப்பு அதிகம், ஏனெனில் கட்சி பெயரில் இருக்கும் மதி முன் களப் பணி ஆற்றும் தலைவரிடம் சுத்தமாக இல்லை. வைகோவின் ஆளுமை இப்படி கொஞ்சம் கூட மரியாதை மற்றுன் இங்கிதம் இல்லாத சினிமா நடிகர் முன்பு மண்டியிடுவதற்குப் பதிலாக அவர் பேசாமல் அரசியல் வனவாசம் போவது உத்தமம். அஸ்கு: என்னண்ணே ரொம்ப கடுப்புல எழுதின மாதிரி இருக்கு பிஸ்கு: பின்ன என்ன தம்பி, ஒவ்வொரு முறையும் மாற்றம் வராதா என்று நம்பிக்கைக் கீற்று வரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. அஸ்கு: இதற்கு வைகோ என்னண்ணே பண்ணுவார்... பாவம். பிஸ்கு: யப்பா, ஒரு உண்மையை நீ தெரிஞ்சுக்கணும். இன்றைய அரசியல்வாதிகளில் நல்ல அரசியல் அறிவு மற்றும் மக்கள் மீது கரிசனம் உள்ளவர்களில் வைகோ முக்கியமானவர். ஆனால் ஒவ்வொருமுறையும் முடிவெடுப்பதில் சொதப்பி இன்னோவா சம்பத்துகளைத்தான் உருவாக்குகிறார். தெளிவான திட்டமிடுதலும் பொறுமையும் இல்லை. அஸ்கு: அண்ணே அவரும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கூட்டணிகளில் இருந்து பார்த்தார் எதுவும் சரிப்படலை என்னப் பண்ணுவார். பிஸ்கு: கூட்டணியைத் தேடிப் போகிற இடத்தில் ஏன் இவர் இருக்கிறார், எதுவுமே இல்லாத உளறல் கேப்டனைத் தேடி ஏன் எல்லாரும் போறாங்க, சிந்தித்துப் பார்க்கணும். அஸ்கு: அவர் என்னண்ணே பண்ணுவார்... பிஸ்கு: அவர் அழாம இருந்தா போதும்.... சரி சரி கண்ணை துடைச்சுக்கோ

Monday, October 25, 2010

கிருஷ்ணனுக்கு ஓ...... இல்லையில்லை....... ஓட்டுப் போடுங்கமதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.

சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)

தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

****

நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!

நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.

"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.

இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.

"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.

இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.

சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

***

ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.

அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.

கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...

உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."

- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய... http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)

கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

Monday, May 3, 2010

காலில் விழுந்த கம்யுனிசம்

போனவாரம் திங்கள் கிழமை 26-04-10 அன்று சொந்த ஊருக்கு செல்வதற்காக பேரூந்தில் ஏறி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனர் இருக்கையில் அலட்சியமாக இருந்த ஒரு மொட்டை ஏறுவோரை ஏளனமாக பார்ப்பது போல பார்த்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார். பேரூந்தில் பல சில்லறை விற்பனையாளர்கள் கூவி கூவி அவரவர் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். பேரூந்திலும் ஓரளவு கூட்டம் சேர்ந்து விட்டது. இன்னமும் வண்டியை கிளப்ப மாட்டேங்கிறானே என்ற எரிச்சல் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஒருவர் கையில் சில பத்திரிகைகளுடன் ஏறி உரக்க சப்தத்துடன் தனது பத்திரிகையை உயர்த்தியபடி சொல்லிக் கொண்டே வந்தார்.
அமெரிக்காவுக்கு அடிவருடும் மத்திய அரசாங்கம், அணு உலை வெடித்தால் அமெரிக்காவுக்கும் அணு அளவும் இழப்பு கிடையாது, நம் பாதுகாப்பை உதாசீனம் படுத்தும் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு இது போன்ற செய்திகள் உள்ள பத்திரிகை. வாங்கி விழிப்படையுங்கள் என்று கூவிக் கொண்டிருந்தார். எல்லாரும் வாங்குங்க வாங்குங்க என்று மேல் மூச்சு வாங்க அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். எல்லாரும் அவர் சொல்வதைத்தான் கேட்டார்களே ஒழிய பத்திரிகையை கேட்கவில்லை.

நான் எனது இருக்கையில் இருந்து எழுந்து என்ன வென்று பார்த்து, அது புதிய ஜனநாயகம் (உண்மை கம்யுனிஸ்ட்களின் பத்திரிகையாம்) என்று அறிந்து சரி நாமாவது வாங்குவோம். என்னதான் சொல்லியிருக்கிறான்னு பார்க்கலாமேன்னு ஒரு புத்தகம் தாங்கண்ணேன்னு கேட்டேன். நான் கேட்கவும் ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். நானும் உடனே எனது மேள்சட்டைப் பையை துளாவி ஒரு 50 ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். அவர் சில்லறை இல்லையான்னு கேட்க நான் உதட்டைப் பிதுக்கினேன். அவர் சில்லறையை எடுக்க தன் பையில் கையை வைக்கும் போதே ஓட்டுநர் கியரைப் போட்டு வண்டியை கிளப்ப ஆரம்பித்தார். இவரும் பரபரப்பாக சில்லறையை எடுத்து என்னிடம் தந்து விட்டு வாசலை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ஓட்டுநர் வண்டியை கிளப்பி விட்டார்.

இவர் ஓட்டுநரை அண்ணே கொஞ்சம் மெதுவா போங்க நான் இறங்கிக்கிறேன்னு சொன்னார், ஆனால் அவரோ முறைத்து பார்த்து விட்டு நீ அடுத்த ஊரில இறங்கி வா அப்ப்டின்னு வண்டியை வேகப்படுத்தினார். ஓட்டுநரிடன் என்னவெல்லாமொ சொல்லிப் பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கடைசியாக அந்த பத்திரிகை விற்பனை செய்தவர் திடீரென ஓட்டுநரின் கால் பக்கம் போனார். என்ன் செய்கிறார், காலை வாரி விடப் போகிறாரா? என்று நினைத்து எட்டிப் பார்த்தேன். பார்த்தால் இவர் அவருடைய காலைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தார். அப்படியும் அந்த ஓட்டுநர் மனம் இறக்கமே இல்லாது வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார். இவரும் காலை விட்ட பாடில்லை.
இதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ரொம்ப வருத்தமாகி, நாம் பத்திரிகையை வாங்கினதினால் தானே இவருக்குப் பிரச்சனை, வாங்காவிடில் அவர் பாட்டுக்கு இறங்கிப் போயிருப்பாரே என்று நினத்து எழுந்து ஓட்டுநரைப் பார்த்து இரக்கமே கிடையாதான்னு குரல் எழுப்பினேன்? இதற்கு அது வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சக பயணிகளும் ஓட்டுநரை திட்டி யோவ் உடனே வண்டியை நிறுத்துயா? என்னு ஓங்கி குரல் எழுப்பினர். பயணிக்ள் சத்தம் கேட்டவுடனே வண்டி உடனே நிறுத்தப் பட்டது. அவரும் இறங்கிக் கொண்டார். காலில் விழுந்த கம்யுனிசவாதியின் சொல்லுக்கு செவிகொடுக்காத ஓட்டுநரை வண்டியை நிறுத்த வைத்தது எது? பயணிகளின் அதிகாரச் சொல்தானே? என்னதான் கொள்கை பேசினாலும் தனிப் பட்ட சொந்தப் பிரச்சனையாக வரும் போது எவரும் கொள்கைகளை மறந்து எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர் என்பதை அன்று கண்டேன்.

Tuesday, April 13, 2010

யாரப்பா இவர்கள்?

உண்மை உணராது
உளறும் உதவாக்கரைகள்
உள்ளவரை
நன்மை நல்காது
நயமாக நடித்து
நற்பெயர் நாடி
நடுத்தெருவில் கூடி
கோஷங்கள் எழுப்புவர் -இவர்
வேஷங்கள் வெளியாகினால்
வெளி வருவது இவர்கள் உண்மை
இவர் வெளிவராதிருப்பது நன்மை

Tuesday, May 5, 2009

எழுதுகிறவர்களுக்கும், எழுதபோகிறவர்களுக்கும்:


குளு குளு தலைப்பு காட்டி கடுப்பேத்தும் நம்ம தமிழ் வலைப்பூ மன்னர்களும் உருப்படியாக பலரும் விரும்பும்படி எழுத நினைப்பவர்களும் வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது.


உங்களில் எத்தனை பேருக்கு ஜார்ஜ் அவுசௌனியன் என்பவரைக் குறித்து தெரியும். இவரைக் குறித்து சொல்லிக் கொள்ள பெரிசாக எதுவுமில்லை. ஆனால் http://maddox.xmission.com/ என்ற வலைப்பூ உங்களுக்கு தெரியுமா. உலகின் நம்பர் ஒன் வலைப்பூ இதுவாகத்தான் இருக்கும். இதை ஆரம்பித்த ஜார்ஜ் கல்லூரிப்படிப்பையே சரியாக முடிக்காதவர். ஆனால் 18வயதிலேயே(1997) ப்ளாக் எழுத ஆரம்பித்துவிட்டார். இவர் ஆரம்பித்த தளத்தின் பெயர்: http://thebestpageintheuniverse.com இவர் உண்மையிலேயே வித்தியாசமாக சிந்திக்க (லாட்டரல் திங்கிங்) தெரிந்தவர்.இணையதளத்தில் இவரின் சாதனைகள் சொல்லிமாளாது.

இவரின் ஒவ்வொரு பதிவுகளும் குறைந்தது பத்து லட்சம் தடவை பார்க்கப்படுகிறது. 50 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட பதிவுகளும் உண்டு. இவரின் வலைப்பூவில் ஒவ்வொரு பதிவின் கீழும் அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை வித்தியாசமான விதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதை இங்கே எழுதுவதை விட நீங்களே அவரின் பக்கத்திற்கு சென்று வாசித்தால்தான் நன்றாக ரசிக்க முடியும்.
இவர் ஓசியில் எழுத இடம் கிடைக்கிறது என்று புகுந்து விளையாடுவதில்லை. என்றாலும் எழுதுபவை பெரும்பாலும் கிண்டலானவையாகவும் இவரே வரைந்த வித்தியாசமான படங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவரிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நாமெல்லாம் பதிவுகளின் எண்ணிக்கையும் வருபவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகமானதுமே இதைவைத்து எப்படி விளம்பர வருமானம் பண்ணுவது என்று யோசிக்கிறோம். அதிலும் சிலர் பதிவுகள் எழுதுவதற்கு முன்பே விளம்பர பேனர்களை வைத்துவிடுகின்றனர். ஆனால் மேற்படி மனிதரின் ஒவ்வொரு பதிவுகளும் பல இலட்சம் முறை வாசிக்கப்படுவது நிச்சயம் என்றாலும் அவரின் வலைப்பூ விளம்பரமின்றியே காட்சியளிக்கிறது. இப்படியே நான் எழுதிக் கொண்டு போனால் இப்பதிவு ஜார்ஜின் புகழ் பாடும் பதிவாகிவிடும். எனது நோக்கம் அதுவல்ல.

நம் தமிழ் ப்ளாக் எழுதுபவர்கள் பலருக்கும் தினமலர் நாளிதழின் மனப்பான்மைதான் தலைப்பு எழுதுவதில் இருக்கிறது. தலைப்பு பரபரப்பாக இருக்கிறதே என்று உள்ளே வந்து பார்த்தால் ஏமாற்றம்தான். அதன்பின் அந்த பக்கம் தலைவச்சுகூட படுக்கக் கூடாது என்று விண்டோவை மூடுவதுதான் எனக்கு அடிக்கடி நடக்கிறது. சுண்டி இழுக்கும் தலைப்புகள் தேவைதான். ஆனால் உள்ளே சரக்கு இருந்தால் தான் அடுத்தமுறை உள்ளே வருகை இருக்கும். இல்லையேல் தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்ற கதை மாதிரிதான்.
இரண்டாவதாக வலைப்பூ என்பது நம் சொந்தக் கதை சோகக் கதைகளை பரிமாறிக் கொள்ள மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நாம் எழுதும் மேட்டர் என்னவாக இருந்தாலும் அதை மொக்கை போடாமல் எழுதுவது அவசியம்.

நம்மாளுகளைத்தான் அட்வைஸ் சொல்லச் சொன்னா சொல்லிக்கிட்டே இருப்போமில்லா. கேக்குறவுக கதிய நினைச்சு இத்தோட முடிச்சிக்கிறேன். அப்புறம் இதுலயே எல்லாத்தையும் சொல்லிப் புட்டா.... அடுத்த பதிவுக்கு என்ன செய்வது.....ஆங்..

அஸ்கு: அண்ணே! நீங்க இன்னும் கொஞ்சம் கூட எழுதிஇருக்கலாம்.

பிஸ்கு: உண்மைதான். ஆனா எப்போதுமே எதையுமே நாம் ஒரே தடவையில திணிக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் சில தனித்தன்மைகள் இருக்கும். அது மிளிர சில அடிப்படைகள் தெரிந்தாலே போது.

அஸ்கு: நீங்க ஆ......ஊன்னா உடனே லாட்டரல் திங்கிங் அப்படி இப்படின்னு சொல்லுவீங்க. நமக்கு சிந்தித்தா பல்ப் எரிய மாட்டேங்குதே!

பிஸ்கு: எல்லாவிசயமும் உடனே வந்துருமா என்ன. நாம் சிந்திக்க வாசிக்கணும். வாசிக்க வாசிக்க.... எல்லாம் அத்துப் படி ஆகிவிடும். வாசிக்கும் போது சிந்துவதை பொறுக்கினாலே பல பதிவுகள் விடலாம். என்னிடம் கைவசம் ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகள் உள்ளன.

அஸ்கு: அப்புறம் என்ன! எழுதிவிட வேண்டியதுதானே?

பிஸ்கு: இப்போதைக்கு தலைப்புகள் மட்டும்தான் உள்ளன. உள்ளே என்ன எழுத வேண்டும் எனபதற்காக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

இத்தலைப்பு தொடர்பாக உள்ள மற்றுமொரு பதிவு:

இதுவரை ப்ளாக் எழுதாதவர்களுக்கு இந்தப் பதிவுTuesday, April 28, 2009

தேர்தல் செருப்பு(சிறப்பு) பட்டிமன்றம்


கலந்து கொள்பவர்கள்: இந்தியன் தாத்தா, இந்திய இளைஞன்
நடுவர்: நீங்கதான்
தலைப்பு :
தேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா? அல்லது ஓட்டா?


இந்த தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரச்சனைகளை விட செருப்பு பிரச்சனை விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது நாமறிந்ததே. இவ்வுயரிய (அ) நாகரீக கலாச்சாரத்தை துவக்கிவைத்த ஈராக்கிய செய்தியாளனுக்கும், இன்றுவரை செருப்பை பெருங்கருப்பாய் காட்டிவரும் ஊடகங்களுக்கும் இந்த பட்டிமன்றம் அர்ப்பணம். (நிறைய பேரை பேச அழைத்திருந்தோம். அவர்கள் பொறுப்புக்கும் செருப்புக்கும் பயந்துவரவில்லை. அதுவும் நல்லதுதான்)

நடுவர்: பெரியோர்களே! அவையோர்களே மற்றும் பெருமதிப்பிற்குரிய பதிவோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பட்டிமன்றதின் தலைப்பு
தேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா? அல்லது ஓட்டா ?
என்பதாகும். ஓட்டு என்று வாதிட தாத்தாவும், செருப்பே என்று வாதிட இளைஞரும் வந்துள்ளனர். வளவளவென்று கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இருவரைப் பற்றீய அறிமுகம் கூட தேவையில்லை என்றே நினைக்கிறேன். இப்பட்டிமன்றத்தின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இப்பட்டிமன்றத்தின் விதிப்படி இருவரும் நான்கு அல்லது ஐந்துவரிகளுக்கு மிகாமல் பேச வேண்டும்.( இல்லையேல் இப்போதே பாதி பேர் வின்டோவை மூடிவிடுவார்கள்). சரி விவாதத்தை யார் துவங்குகிறீர்கள்?

தாத்தா: இளைஞர்கள் துடிப்பானவர்கள். எனக்கு பொறுமை இருக்கிறது. ஆகவே இளைஞரே முதலில் பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.

இளைஞர்: எனது விவாதத்தை பிஸ்கு அண்ணாவின் கவிதையோடு ஆரம்பிக்கிறேன்.

வெறுப்பிருந்தால் செருப்பிருக்கு
நெருப்பு இருக்கிறதா
உன்னிடம்???

இன்றைய போலி ஜன நாயக நாட்டில் செருப்புதான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும்.

தாத்தா: நெருப்பு இருக்கும் இளைஞனே உனக்கு பொறுப்பு இருக்கிறதா? பெரிய பருப்பு மாதிரி பேசுவதில் புண்ணியமில்லை. செருப்பு வீசினால் ஒரு நாள் மட்டுமே சந்தோசம். நீ ஓட்டு போடாவிடில்.........??? அவனுக்கல்லவா சந்தோசம். உன் பெயரில் கள்ள ஓட்டு .........அப்புறம் உன் பாடு.

இளைஞர்: இளைஞர்களிடம் உங்களைப் போன்ற பழுத்த கிழங்களின் பருப்பு வேகாது என்பதுதான் உண்மை. எத்தனை முறை நாம் ஓட்டு போட்டாலும் அரசியல்வாதி திருந்த மாட்டான். ஒரு செருப்படி நடத்திவிடும் பல உருப்படியானவற்றை

தாத்தா: தம்பி! உங்களிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. விவேகம் முளைத்தால்தான்.........
( நடுவர் குறுக்கிட்டு)
நடுவர்: நானும் இருக்கேன் என்பதை மறந்து அரசியல் பேசாதீங்க தாத்தா. இது பட்டி மன்றம். ஆகவே அரசியல் கலப்பு இல்லாமல் எவரையும் உங்கள் வார்த்தைகளில் நினைவுபடுத்தாமல் பேசுங்கள்

தாத்தா: சரி, நடுவரே! தம்பி நீ செருப்பை பற்றி யோசிப்பதற்கு முன் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பாய் கொஞ்சம் யோசி. நாட்டின் நாளைய எதிர்காலம் உங்கள் கையில்தான் மறந்துவிடாதே.

இளைஞர்: பொறுப்பாய் யோசிப்பதால் தான் செருப்பு. இவர்கள் அரசியலை விட்டு போனால்தானே நாங்க வரமுடியும். செருப்பைப் பார்த்தாலாவது அடுத்த முறை ஒதுங்குவார்கள் அல்லவா? எங்களுக்கு செருப்பு கால் தூசி. ஆனால் அவர்களுக்கு பெரும் மானப் பிரச்சனை. அதனாலேதான்..........

தாத்தா: நீ சொல்வது கொஞ்சம் உண்மை எனினும் செருப்பு வீசினால் அடுத்த நாள் மட்டும் உன் பெயர் செய்தித்தாளில் வரும். நீ பலபேரை ஒழுங்காக ஓட்டுப் போடச் செய்தால்...........
அது நல்ல பலனைத்தருமே!

இளைஞர்: ஓட்டுப் போட்டு இந்தியா அடைந்த இலட்சணத்தைத்தான் நாம் 60 வருடங்களா பார்த்துகிட்டு இருக்கோமே! ஓட்டுப் போட நான் தயார். ஆனா நான் ஓட்டுப் போட உருப்படியான ஒருவனை நீங்க கைகாட்டுங்க பார்க்கலாம்.

நடுவர்: தம்பி, இதோ சென்னையில கூட சரத்பாபுன்னு ஒருத்தர் நிற்கிறாரேப்பா.! மறந்துட்டியா?

இளைஞர்: நல்ல ஓட்டு போட வழி கேட்டால் கள்ள ஓட்டுக்கு வழி சொல்றீங்க. ஓட்டு இருக்கிற எல்லாரும் தென்சென்னைக்குப் போய்தான் ஓட்டுப் போடனுமா என்ன? சுயேட்சை தானே அவரு. ஒவ்வொரு பெரிய கட்சியும் கிரிமினல்களையும், அதைச் செய்து கோடீஸ்வரன்களானவர்களைத்தானே நிப்பாட்டுது?

தாத்தா: விதண்டாவாதம் செய்தால் புண்ணியமில்லை. இருப்பவனில் நல்லவனுக்கு ஓட்டுப் போடு.

இளைஞர்: எதற்கு? அவனும் அந்த சாக்கடையில் கிடந்து ஊறி நாறுவதற்கா?

தாத்தா: ஏன் கம்யுனிஸ்டுகள் இல்லையா?

இளைஞார்: இருக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் மற்றும் கேரளாவிலும் அவர்கள் சாதித்தது என்ன? மற்ற மாநிலங்களைவிட அவை பின் தங்கியல்லவா இருக்கிறது.

தாத்தா: தம்பி நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு அடம் பிடிக்காதே. பொறுப்பை யுணர்ந்து வெறுப்பை உன் ஓட்டில் காட்டு.

இளைஞர்: அடியாத மாடு பணியாதாம்! பழம் பெருசுகள் சொல்லியிருகிறார்கள். அதனால........

நடுவர்: நான் ஒருவன் இங்கே இருப்பதையே வசதியாக நீங்க இருவரும் மறந்து விட்டீர்கள். உங்க பாட்டூக்கு பேசிகிட்டே போனால் ..... அப்புறம் யார் படிப்பது. சாரி முடிப்பது. அதனால நானே முடிக்கிறேன். விளக்கமா கூறி வில்லங்கம் பேச விரும்பவில்லை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

எனது தீர்ப்பும் கூட இதுதான்

அஸ்கு: என்னண்ணே! நடுவர் இப்படி எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் யாருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லியிருக்கார்.

பிஸ்கு: இதற்கு என்னுடைய பதில்:மறைந்த எழுத்தாளர் சுஜாதா 'கடவுள் இருக்கிறாரா?' என்ற புத்தகத்தில் கடைசியாக கூறிய அவரது பதில்தான்.

அஸ்கு: ஐயோ.... முடியல...... அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் விவரமா.........

பிஸ்கு: IT DEPENDS


பிடிச்சிருந்ததா ஓட்டுப் போடுங்க.... பிடிக்காட்டியும் கருத்தை எழுதுங்க

Monday, April 27, 2009

கூகுள் படுத்தும் பாடு தாங்க முடியலை


வலைதளங்களில் கூகுள் பண்ணும் ரவுசும் புதுமையும் விளக்கி விவரிக்கவியலாவண்ணம் வியக்கும்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லி அடிப்பது ஒரு கலை இவர்கள் சொல்லாமல் அடிக்கிறார்கள், கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விவரமறிய........

கடந்த இரு தினங்களாக கூகுள் தேடலுக்காக அப்பக்கம் சென்றபோது கூகுள் பக்க முகப்பு வித்தியாசமாக இருந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள். ஏதோ சிறிய கோடுகள்ம் புள்ளிகளும் மாத்திரம் தெரிந்தது. நான் எனது பிரவுசர் கோளாறு என்று நினைத்து விட்டுவிட்டேன். ஒவ்வொரு முறை தேடும் போதும் எனக்கு அது கேள்விக்குறியாகவே இருந்தது. உண்மை என்ன என்று அதில் மவுஸை வைத்து கிளிக்கினார் சாமுவேல் மோர்ஸ் என்பவரைப் பற்றீய விக்கிப்பேடியா தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. பிறகுதான் தெரிந்தது, மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சேவைக்கு பயன்படுத்தப்படுகிற கோட் முறையை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் என்பவரின் பிறந்த நாள் ஏப்ரல்27 என்பதினாலும் அவரை நினைவுபடுத்தி பெருமைப்படுத்தவே கூகுள் இவ்வாறு செய்திருக்கிறது என்றும் அறிந்தேன். மோர்ஸ் கோட் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. நல்ல ஒரு லாட்டரல் திங்கிங். யாராவது இரகசியம் காக்க தாராளமாக மோர்ஸ் கோடை பயன்படுத்தலாம் என்று நோபல் பரிசு பெறாத நான் பரிந்துரைக்கிறேன். கீழே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

- .... .- -. -.- -.-- --- ..-

மோர்ஸ் கோடுக்கும் நாம் இன்று கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைனரி இலக்க முறைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. விவரமறிந்த வித்துவான்கள் விளக்கினால் அவர்களுக்கு எனது ஓட்டு உண்டு. கீழே மோர்ஸ் கோட் விளக்கப் படம்.


அஸ்கு: பிஸ்கு அண்ணா, மோர்ஸ் கோட் என்ற ஒன்று இருப்பதே எனக்கு இன்றுதான் தெரியும்.

பிஸ்கு: அவரை மற்ற நாடுகள் எல்லாம் பெருமைப்படுத்திய பின் தான் அமெரிக்கா அவரை கனப்படுத்தியது என்பதும் எனக்கு இன்றுதான் தெரிந்தது.

அஸ்கு: இது குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

பிஸ்கு: நம்ம நாட்டுல உள்ளவங்க இங்கே ஒன்றையும் செய்ய முடியாமல் வெளி நாட்டிற்கு சென்று சாதித்த பின் அவர்களை எங்கள் மண்ணின் மைந்தர் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் இந்திய அரசுதான். (கல்பனா சாவ்லா, அமர்த்தியா சென், சபீர் பாட்டியா...)

அஸ்கு: மேலை நாடுகள் போல இங்கே புதுக் கண்டுபிடிப்புகள் ஏதும் வரமாட்டேங்குதே. ஏன்?

பிஸ்கு: அவர்கள் கண்டுபிடிப்பில் வல்லவர்கள். இங்கே குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் அதான். இங்கே ஒருவன் ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க நினைத்தால் அவனுக்கு உதவி கிடைக்காமலிருப்பது ஒரு பக்கம் என்றால் அவன் படும் போராட்டங்கள் ஏளனங்கள் இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை ஆராய்ச்சியிலிருந்து துரத்திவிடுகின்றன. அப்படியும் அவன் ஏதாவது சாதித்துவிட்டால் பண முதலைகள் அவனை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் ஒருவன் புதிதாக் கண்டு பிடிக்க முனைந்தால் அவனுக்கு எல்லாரும் ஒத்துழைப்பார்கள். அப்படி பலர் ஒத்துழைத்ததின் விளைவுதான் இந்த கூகுள் தேடல் பக்கமும் கூட.

அஸ்கு: நம் நாட்டில் இப்படி நடக்க என்ன செய்யணும்?

பிஸ்கு: -.. .-. . .- --