Tuesday, April 28, 2009

தேர்தல் செருப்பு(சிறப்பு) பட்டிமன்றம்


கலந்து கொள்பவர்கள்: இந்தியன் தாத்தா, இந்திய இளைஞன்
நடுவர்: நீங்கதான்
தலைப்பு :
தேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா? அல்லது ஓட்டா?


இந்த தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரச்சனைகளை விட செருப்பு பிரச்சனை விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது நாமறிந்ததே. இவ்வுயரிய (அ) நாகரீக கலாச்சாரத்தை துவக்கிவைத்த ஈராக்கிய செய்தியாளனுக்கும், இன்றுவரை செருப்பை பெருங்கருப்பாய் காட்டிவரும் ஊடகங்களுக்கும் இந்த பட்டிமன்றம் அர்ப்பணம். (நிறைய பேரை பேச அழைத்திருந்தோம். அவர்கள் பொறுப்புக்கும் செருப்புக்கும் பயந்துவரவில்லை. அதுவும் நல்லதுதான்)

நடுவர்: பெரியோர்களே! அவையோர்களே மற்றும் பெருமதிப்பிற்குரிய பதிவோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பட்டிமன்றதின் தலைப்பு
தேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா? அல்லது ஓட்டா ?
என்பதாகும். ஓட்டு என்று வாதிட தாத்தாவும், செருப்பே என்று வாதிட இளைஞரும் வந்துள்ளனர். வளவளவென்று கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இருவரைப் பற்றீய அறிமுகம் கூட தேவையில்லை என்றே நினைக்கிறேன். இப்பட்டிமன்றத்தின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இப்பட்டிமன்றத்தின் விதிப்படி இருவரும் நான்கு அல்லது ஐந்துவரிகளுக்கு மிகாமல் பேச வேண்டும்.( இல்லையேல் இப்போதே பாதி பேர் வின்டோவை மூடிவிடுவார்கள்). சரி விவாதத்தை யார் துவங்குகிறீர்கள்?

தாத்தா: இளைஞர்கள் துடிப்பானவர்கள். எனக்கு பொறுமை இருக்கிறது. ஆகவே இளைஞரே முதலில் பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.

இளைஞர்: எனது விவாதத்தை பிஸ்கு அண்ணாவின் கவிதையோடு ஆரம்பிக்கிறேன்.

வெறுப்பிருந்தால் செருப்பிருக்கு
நெருப்பு இருக்கிறதா
உன்னிடம்???

இன்றைய போலி ஜன நாயக நாட்டில் செருப்புதான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும்.

தாத்தா: நெருப்பு இருக்கும் இளைஞனே உனக்கு பொறுப்பு இருக்கிறதா? பெரிய பருப்பு மாதிரி பேசுவதில் புண்ணியமில்லை. செருப்பு வீசினால் ஒரு நாள் மட்டுமே சந்தோசம். நீ ஓட்டு போடாவிடில்.........??? அவனுக்கல்லவா சந்தோசம். உன் பெயரில் கள்ள ஓட்டு .........அப்புறம் உன் பாடு.

இளைஞர்: இளைஞர்களிடம் உங்களைப் போன்ற பழுத்த கிழங்களின் பருப்பு வேகாது என்பதுதான் உண்மை. எத்தனை முறை நாம் ஓட்டு போட்டாலும் அரசியல்வாதி திருந்த மாட்டான். ஒரு செருப்படி நடத்திவிடும் பல உருப்படியானவற்றை

தாத்தா: தம்பி! உங்களிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. விவேகம் முளைத்தால்தான்.........
( நடுவர் குறுக்கிட்டு)
நடுவர்: நானும் இருக்கேன் என்பதை மறந்து அரசியல் பேசாதீங்க தாத்தா. இது பட்டி மன்றம். ஆகவே அரசியல் கலப்பு இல்லாமல் எவரையும் உங்கள் வார்த்தைகளில் நினைவுபடுத்தாமல் பேசுங்கள்

தாத்தா: சரி, நடுவரே! தம்பி நீ செருப்பை பற்றி யோசிப்பதற்கு முன் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பாய் கொஞ்சம் யோசி. நாட்டின் நாளைய எதிர்காலம் உங்கள் கையில்தான் மறந்துவிடாதே.

இளைஞர்: பொறுப்பாய் யோசிப்பதால் தான் செருப்பு. இவர்கள் அரசியலை விட்டு போனால்தானே நாங்க வரமுடியும். செருப்பைப் பார்த்தாலாவது அடுத்த முறை ஒதுங்குவார்கள் அல்லவா? எங்களுக்கு செருப்பு கால் தூசி. ஆனால் அவர்களுக்கு பெரும் மானப் பிரச்சனை. அதனாலேதான்..........

தாத்தா: நீ சொல்வது கொஞ்சம் உண்மை எனினும் செருப்பு வீசினால் அடுத்த நாள் மட்டும் உன் பெயர் செய்தித்தாளில் வரும். நீ பலபேரை ஒழுங்காக ஓட்டுப் போடச் செய்தால்...........
அது நல்ல பலனைத்தருமே!

இளைஞர்: ஓட்டுப் போட்டு இந்தியா அடைந்த இலட்சணத்தைத்தான் நாம் 60 வருடங்களா பார்த்துகிட்டு இருக்கோமே! ஓட்டுப் போட நான் தயார். ஆனா நான் ஓட்டுப் போட உருப்படியான ஒருவனை நீங்க கைகாட்டுங்க பார்க்கலாம்.

நடுவர்: தம்பி, இதோ சென்னையில கூட சரத்பாபுன்னு ஒருத்தர் நிற்கிறாரேப்பா.! மறந்துட்டியா?

இளைஞர்: நல்ல ஓட்டு போட வழி கேட்டால் கள்ள ஓட்டுக்கு வழி சொல்றீங்க. ஓட்டு இருக்கிற எல்லாரும் தென்சென்னைக்குப் போய்தான் ஓட்டுப் போடனுமா என்ன? சுயேட்சை தானே அவரு. ஒவ்வொரு பெரிய கட்சியும் கிரிமினல்களையும், அதைச் செய்து கோடீஸ்வரன்களானவர்களைத்தானே நிப்பாட்டுது?

தாத்தா: விதண்டாவாதம் செய்தால் புண்ணியமில்லை. இருப்பவனில் நல்லவனுக்கு ஓட்டுப் போடு.

இளைஞர்: எதற்கு? அவனும் அந்த சாக்கடையில் கிடந்து ஊறி நாறுவதற்கா?

தாத்தா: ஏன் கம்யுனிஸ்டுகள் இல்லையா?

இளைஞார்: இருக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் மற்றும் கேரளாவிலும் அவர்கள் சாதித்தது என்ன? மற்ற மாநிலங்களைவிட அவை பின் தங்கியல்லவா இருக்கிறது.

தாத்தா: தம்பி நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு அடம் பிடிக்காதே. பொறுப்பை யுணர்ந்து வெறுப்பை உன் ஓட்டில் காட்டு.

இளைஞர்: அடியாத மாடு பணியாதாம்! பழம் பெருசுகள் சொல்லியிருகிறார்கள். அதனால........

நடுவர்: நான் ஒருவன் இங்கே இருப்பதையே வசதியாக நீங்க இருவரும் மறந்து விட்டீர்கள். உங்க பாட்டூக்கு பேசிகிட்டே போனால் ..... அப்புறம் யார் படிப்பது. சாரி முடிப்பது. அதனால நானே முடிக்கிறேன். விளக்கமா கூறி வில்லங்கம் பேச விரும்பவில்லை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

எனது தீர்ப்பும் கூட இதுதான்

அஸ்கு: என்னண்ணே! நடுவர் இப்படி எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் யாருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லியிருக்கார்.

பிஸ்கு: இதற்கு என்னுடைய பதில்:மறைந்த எழுத்தாளர் சுஜாதா 'கடவுள் இருக்கிறாரா?' என்ற புத்தகத்தில் கடைசியாக கூறிய அவரது பதில்தான்.

அஸ்கு: ஐயோ.... முடியல...... அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் விவரமா.........

பிஸ்கு: IT DEPENDS


பிடிச்சிருந்ததா ஓட்டுப் போடுங்க.... பிடிக்காட்டியும் கருத்தை எழுதுங்க

4 comments:

johnindia said...

good one anna :)

Annaraj Ponpandi said...
This comment has been removed by a blog administrator.
அஸ்குபிஸ்கு said...

அண்ணாச்சிமார்களே உங்க கருத்துரைகளுக்கு நன்றி. அப்படியே அப்பப்ப நம்ம கடை பக்கம் வந்துட்டு போங்க

ISR Selvakumar said...

//வெறுப்பிருந்தால் செருப்பிருக்கு
நெருப்பு இருக்கிறதா
உன்னிடம்???//

நிஜமாகவே யோசிக்க வைக்கும் வரிகள்.

Post a Comment