Saturday, December 15, 2018

வெறும் அரசியல் - உரையாடல் 1

அஸ்கு: அண்ணே, உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க?

பிஸ்கு: எனக்கென்னப்பா, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். இருக்கத்தான் உடமாட்டேங்குறானுவ!

அஸ்கு: ஏண்ணே, ஏதும் பிரச்சனையா?

பிஸ்கு: எனக்கு ஒன்னும் இல்லப்பா, என்னைச் சுற்றி நடப்பவைகள்தான் பிரச்சனையா தெரியுது.

அஸ்கு: அதுக்கென்ன, ஒரு நல்ல கண்ணாடியா வாங்கிப் போட்டுட்டா எல்லாம் நல்லா தெரியப் போவுது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா!

பிஸ்கு: கண்ணாடின்னு சொன்னதும் எனக்கு ஒரு வீடியோ ஞாபகத்துக்கு வருது. பிறகு நீ பார்த்து தெரிஞ்சுக்கோ. இது என் கண்பார்வை சம்பந்தமான பிரச்சனை இல்லை, நாட்டு நடப்பு பற்றியது....  இதெல்லாம் உனக்கு எங்க புரியப் போவுது.

அஸ்கு: புரிய வைக்கத்தான் நீங்க இருக்கீங்க இல்ல. என்ன நாட்டு நடப்பு?

பிஸ்கு: நல்ல வேளை எந்த நாட்டு நடப்புன்னு கேட்காம விட்ட. கடந்த சில வருடங்களாக நடக்கும் விசயங்களைப் பார்த்தா மனசு பொறுக்கல.

அஸ்கு: ஏண்ணே, நீங்க அதையெல்லாம் பார்க்குறீங்க, பேசாம கண்ணை மூடிகிட்டு வேற பக்கமா போயிடுங்க.

பிஸ்கு: போடாங்....கேய்.... எனக்கு இருக்க கோவத்துல நல்லா வாங்கி கட்டிக்காத. ஏற்கனவே ஒரு ஏழைத் தாயின் மகன் படுத்துற பாடு முடியல.

அஸ்கு: அண்ணே, உங்களுக்குதான் ஏழைகள் என்றால் பிடிக்குமே, பின்ன என்ன?

பிஸ்கு: ஏலேய், இது உண்மையான ஏழையா இருந்தா பரவா இல்ல. நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று சொல்கிற ஒருவன் என்ன பண்ணுவான். ஏழைகளுக்காக நிற்பான், அவர்களின் கஷ்டங்களை அறிந்து முடிந்ததைச் செய்வான். ஆனால், அதற்கு நேர்மாறாக, எப்போதும் விமானப் பயணம், பணக்காரர்களுடன் விருந்து மற்றும் இலட்சங்களில் உடை என்று இருந்தால் அப்படி சொல்லும் நபரை எப்படி நம்புவது?

அஸ்கு: தன்னால செய்ய முடியாததை செய்து பார்க்கிறார்னு நினைச்சுக்கலாம். ஆமா யாரு அந்த ஏழைத் தாயின் மகன்? சொல்லுங்க நம்ம தமிழ் நாட்டு அரசு உதவிதிட்டம் எதிலாயாவது சேர்த்து விட்டு உதவி பண்ணலாம்.

பிஸ்கு: தம்பி, புரிந்துதான் பேசுறியா அல்லது லூசாயிட்டியா! நான் சொல்லும் நபர் இந்தியாவின் தற்காலிக, சாரி தற்போதைய பிரதமர்.

அஸ்கு: ஓ அந்த மோ....டி யை சொல்றீங்களா! அவருக்கென்ன, மனுசன் தில்லா சுத்தி வர்றார். அதில் உங்களுக்கென்ன பொறாமை!

பிஸ்கு: அந்தாளு மேல எனக்கேன் பொறாமை. ஒரு ஆற்றாமைன்னு வேணா சொல்லலாம். நாலு வருசத்துல, நாட்டையே நடுச்சந்தியில நிறுத்தி இருக்காரு.

அஸ்கு: நல்லா எதுகையோட சொல்றீங்களே. அப்படி என்ன செய்தார்?

பிஸ்கு: நல்லா கேட்ட, செய்ய வேண்டியது எதுவுமே செய்யல, எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதில் எதையுமே விடல.

அஸ்கு: அண்ணே இப்படில்லாம் சொன்னா என் மரமண்டைக்கு எதுவுமே புரியாது. விளக்கமா சொல்லுங்க.

பிஸ்கு: அச்சா தீன், விகாஸ், சுவாச் பாரத், மான் கீ பாத்.....

அஸ்கு: அண்ணே நிறுத்துங்க. என்னாச்சு உங்களுக்கு, சம்பந்தமே இல்லாம உளறுரீங்க.

பிஸ்கு: பாத்தியா கொஞ்சம் எடுத்து விட்டதுக்கே நான் உளறுரேன்னு சொல்ற. ஒருத்தர் நாலு வருசமா இதையே சொல்லி காதுல பூ சுத்திகிட்டு இருக்காரு. ஆனா அதுல எதையுமே செய்யல.

அஸ்கு: எவருண்ணே அந்த பிராதுமாமனிதர்?

பிஸ்கு: அதைத்தான் சொன்னேனே. சரி பிறர் மனை நோக்கா பேராண்மை அப்படின்னா என்னன்னு தெரியுமா?

அஸ்கு: ஓ தெரியுமே. ஒரு ஆம்பளையா இது கூட தெரியலன்னா எப்படி. அடுத்தவங்க வீட்டுல எத்தன பிள்ளங்க இருக்காங்கன்னு பார்க்காம, நம்ம வீட்டுல பிள்ளைங்க எண்ணிக்கைய கூட்டுறதுக்கு என்ன செய்யணுமோ அதைத்தானே  பேராண்மைன்னு சொல்வாங்க.

பிஸ்கு: அய்யோ கடவுளே, இப்படிப் பட்ட அறிவாளிக்கு நான் எப்படி புரிய வைப்பேன். தம்பி, இது திருக்குறளில் வரும் ஒரு சொற்றொடர். அடுத்தவன் மனைவியை  தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருக்கும் ஒரு அறமே இது என சொல்லி இருக்கிறார்கள்.

அஸ்கு: இதுக்கு அந்த ஏழைத்தாயின் மகனுக்கும் என்னண்ணே சம்பந்தம்?

பிஸ்கு: இருக்கு தம்பி. இவர் கடந்த நாலு வருசமா எப்பப் பார்த்தாலும் எதிர் கட்சியான காங்கிரசையும், நேருவையும் குறை சொல்வதைத் தவிர வேறேதையும் செய்யல. இவர் பேசுறதை பார்த்தா நாம நேரு காலத்துல இருக்குறோமான்னு ஒரு டவுட்டு வந்து போவுது.

அஸ்கு: நேரு ஒரு மேரு. நேரு மாமாவை குறை சொல்ல இவர் என்ன கண்டார்.

பிஸ்கு: அது ஒரு பெரிய விசயம். உனக்கு புரியாது.

அஸ்கு: சரி புரியற மாதிரி சொல்லுங்க.

பிஸ்கு: நாட்டையும் நாட்டு மக்களையும் ஒரு ஐம்பது வருசத்துக்கு முந்திய நிலைமைக்கு பின்னாடி இழுத்துட்டு போறேன்ங்கிறத சிம்பாலிக்கா இப்படி சொல்றாரு.

அஸ்கு: அது எப்படிண்ணே, முன்னேற்றுவேன்னு சொல்லிட்டு பின்னாடி இழுத்தா, அதுக்கு பேர் மோசடி இல்லையா. என் இரத்தம் கொதிக்குது...

பிஸ்கு: மோசடின்னு சொல்லும்போதே அவருடைய பேரையும் சேர்த்துதான் நீ சொல்ற. எதுக்கும் ஒரு நல்ல மாத்திரையை வாங்கி போட்டுக்க. நான் விளக்கமா அடுத்த தடவ சொல்றேன்.

அஸ்கு: ஏதோ கொஞ்சம் புரியுது. ஆனா, என் நிம்மதியே போச்சு, சீக்கிரம் வாங்க.

பிஸ்கு: புரிஞ்சவங்க அதைத்தான் சொல்றாங்க, சீக்கிரம் போங்க. ஒகே சில நாள்ல நாம் சந்திப்போம். 

- சந்திப்பு தொடரும்

No comments:

Post a Comment