Sunday, April 19, 2009

அரசியல் (புது) அறிமுகம்

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு. 

நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு. ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா? 

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். 

ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு.

"என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!" என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு. 

என்ன சொல்ல..?

ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!


அஸ்கு: நான் தென்சென்னையிலிருந்தால் .............

பிஸ்கு: உங்களுக்குத்தான் அங்க ஓட்டு கிடையாதே...... நீங்கதான் 

அஸ்கு: நான் அவருக்கு ஓட்டுப் போடனும்னு ஆசை. ஒரு உண்மையான திமுக தொண்டனுக்கு ஓட்டு இல்ல்ன்னாலும் சரத்பாபுவுக்கு ஓட்டு எப்படி போடறதுன்னு தெரியும்

பிஸ்கு: நீங்க சொல்றது நேர்மையான வழியா தெரியலையே

அஸ்கு: இவ ரொம்ப நல்லவனா இருக்கான்யா. அதனாலதான்

இந்தப் பதிவு சென்னையில் உள்ள நல்ல் மற்றும் கள்ள ஓட்டு போடும் அன்பர்களின் கவனத்துக்கு



No comments:

Post a Comment